உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.! கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பினர்..!!

சமூக நலன்

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.! கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பினர்..!!

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.! கோட்டாட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பினர்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் மா.காளிதாஸ் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புத்துயிர் ரத்ததான கழக நிர்வாகி  தமிழரசன், புதிய   தமிழகம் ரத்ததான கழக நிர்வாகி அன்புராஜ், சூர்யா ரத்ததான கழக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் முழங்கினர்.தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் இரவு மற்றும் விபத்துக்காலங்களிலும் எடுக்க வேண்டும், வார்டுகளில் தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும், மருத்துவர்களின் வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவ கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.20-ம் தேதி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். இந்த இடம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்துவதற்கு காவல்துறையால் தீர்மானிக்கப்பட்ட இடம். ஆனால், உண்ணாவிரதத்துக்கு கிழக்கு காவல் நிலைய போலீஸார் தேவையற்ற காரணங்களை கூறி போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் எங்களது அகிம்சை வழி போராட்டத்துக்கு தடை விதிப்பது, மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, எங்களது போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸார் உரிய அறிவுரை வழங்க கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து, இரத்ததான கழக கூட்டமைப்பினர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகம், ஜீவ அனுகிரகா நல அறக்கட்டளை, பிரபாகரன் குருதிக்கொடை பாசறை, பசும்பொன் இரத்ததான கழகம், மகாத்மா காந்தி இரத்ததான கழகம், ஆதித்தமிழர் பேரவை ரத்ததான கழகம் சியான் விக்ரம் இரத்ததான கழகம், அன்னை தெரசா ரத்ததான கழகம், பசுபதிபாண்டியனார் அறக்கட்டளை  ரத்ததான கழகம், ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம்,  ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ராஜசேகர், பாமக மாரிமுத்து, அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ராஜேஷ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்

நமது நிருபர்
தூத்துக்குடி ப.பரமசிவம்

 

Comments are closed.