குமரியில் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ; அறிவுரை கூறிய காவல்துறையினர் மீது தாக்குதல்..
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு வரும் மே 3ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் உத்தரவையும் மீறி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பலரும் வலம் வந்தபடி உள்ளனர்.இதை அடுத்து காவல் துறையினர் மூலம் தேவையின்றி ஊர் சுற்றும் அவர்களை பிடித்து கைது செய்வதும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
— Kanniyakumari District Police (@kumari_police) April 27, 2020
குமரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் கடற்கரை கிராமமான தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.இதனால் தேங்காய்பட்டினம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இந்தநிலையில் நேற்றுகாலை முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டித்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
பின்னர் மாலையில் போலீசார் ரோந்து சென்றபோதும், அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இதனால் மீண்டும் போலீசார் அவர்களை எச்சரித்தனர். அப்போது போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டனர். அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
திடீரென கூட்டத்தில் நின்ற சிலர் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஏட்டுகள் மணிகண்டன், அருள்டேவிட், பெண் போலீசார் மேகலா, சிந்து, ஜில்லெட் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். மேலும் 2 போலீஸ் வாகனங்களும் கல்வீசி தாக்கப்பட்டன. அந்த வாகனங்களின் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.தகவல் அறிந்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முள்ளூர்துறையைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஊரடங்கை மீறுதல், அரசு வாகனங்களை சேதப்படுத்துதல் என 11 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஸ்டான்லி (வயது 49), வர்க்கீஸ் (50), சீஜன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் ஸ்டீபன், முள்ளூர்த்துறை பங்கு தந்தை கிறிஸ்து ராஜ், அருட்பணியாளர் ராஜ் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் முள்ளூர்த்துறை பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் ஒரு மனு கொடுத்தனர் அதில்;- கொரோனா என்ற வைரஸ் நோயை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையின் தன்னலம் இல்லாத பணியை பாராட்டி, நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடந்த 25-ந் தேதி முள்ளூர்த்துறையைச் சேர்ந்த மக்கள் காவல் துறையினர் மீது எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலுக்காக வருந்துகிறோம்.
இந்த பிரச்சினை தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரச்சினையில் தொடர்பு கிடையாது. இதனால் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரச்சினையில் இல்லாமல் இருந்தால் அவர்களுடைய பெயரையும் நீக்க வேண்டும். தேவை இல்லாமல் கிராம மக்களை தொந்தரவு செய்யக்கூடாது.
முள்ளூர்த்துறை ஊர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதால் சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறு செய்தவர்கள் ஒருவேளை பக்கத்து கிராமங்களில் தஞ்சம் அடைந்திருந்தால் அந்த கிராம மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது நல்லது.காவல்துறையினரால் முள்ளூர்த்துறை ஊரில் உள்ள ஏராளமான வாகனங்கள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
Leave your comments here...