தனது ஒரு வருட சேமிப்பை “மனோலயா மனநல” காப்பத்தில் உள்ள ஏழைகளுக்காக வழங்கிய சிறுவன்..!
இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஊரடங்கானது வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த சூழலில் ஒவ்வொரு பகுதியிலும், தொகுதிவாரியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை காத்துக் கொள்ள அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். தனித்திருப்பது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்களிடையே ஏற்படுத்த அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் மகன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தனது ஒரு வருட சேமிப்பை வழங்கியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களான விஜயன், கிரிஜா மணி தம்பதியினரின் மகன் ஸ்ரீஹரி. ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஸ்ரீஹரி உண்டியல் மூலம் சேகரிக்கும் பணத்தை வருடம் தோறும் ஏதாவது ஒரு கோயிலுக்கு திருவிழா நன்கொடையாக வழங்குவது வழக்கம்.
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நோயின் அசாதாரண சூழலில் தனது சேமிப்பு பணத்தை ஏழைகளின் உணவிற்கு வழங்க ஆசைப்பட்டார். தன் விருப்பத்தை பெற்றோர்களிடம் கூறினார். விஜயன் தனது காவல்த்துறை நன்பர் வினோத் குமாரிடம் தன் மகன் விருப்பத்தை தெரிவித்தார். குமரியில் இயங்கி வரும் மனநோயாளிகள், ஆதரவற்ற முதியோர்களுடன், தற்போதைய சூழலில் சொந்த ஊருகளுக்கு செல்லமுடியாத பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் மனோலயா மனநில காப்பகத்தில் உதவ முடிவு செய்தனர்.
பின்னர் நேற்று குடும்பத்துடன் காப்பகத்திற்கு சென்ற ஸ்ரீஹரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் 12 மூடை அரிசி வழங்கினார். உடன் மனோலயா மனநல காப்பக இயக்குநர் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்
Leave your comments here...