கொரோனா தொற்றுக்கு எதிரான போர் : நாடு முழுவதும் 1150 டன் மருந்துகளை விநியோகம் செய்த ரயில்வே துறை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே ரயில்களில் மே 3ம் தேதி வரை சுமார் 39 லட்சம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு முழு தொகையும் அவர்களின் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள மே 3ம் தேதி வரை எந்த வித சிறப்பு பயணிகள் ரயிலும் இயக்கப்படாது எனவும், சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுதும் முழு ஊரடங்கு (Nationwide Lock Down) அமலில் உள்ள நிலையில், கோவிட் -19 கிருமித் தொற்றினை ஒழிக்கும் வகையில் மருந்துகள், முகக்கவசங்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை இந்திய ரயில்வே நாடு முழுதும் வழங்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்குத் துணைபுரியும் வகையில் பார்சல் வாகனங்கள் மூலம் இவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 2020, ஏப்ரல் 18ஆம் தேதி வரையில் மொத்தம் 1150 டன் மருந்துப் பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Leave your comments here...