கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கிய 82 வயதான முதியவர் குவியும் பாராட்டு..!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார்.நாட்டில் கொரோனாவிற்கான பாதிப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் நிதி அளிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் 82 வயதான சுபாஷ் சந்திர பானர்ஜி என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கோல்கட்டாவின் டம்டம் பகுதியில் சிறிய வீட்டில் வசித்த அவர், தனது ஓய்வூதிய பணத்தில் தான் மருந்து , மாத்திரைகளை வாங்குவார். தற்போது நாட்டில் மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுபாஷ் பானர்ஜி தனது வீட்டிற்கு அருகில் உள்ள போலீசாரை அழைத்து பேசினார்.சுபாஷ் பானர்ஜிக்கு வயதான காரணத்தால், முதியவர் ஏதோ உதவி கேட்பதற்காக தம்மை அழைப்பதாக நினைத்து சென்ற போலீசார், முதியவரின் செயலை கண்டு நெகிழ்ந்து விட்டனர். காரணம், போலீசாரிடம், சுபாஷ், கொரோனா நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இது தொடர்பாக முதியவர் கூறுகையில், எனக்கு ஆன்லைனில் பணம் போட முடியாது. அதனால் தான் உங்களிடம் கொரோனா நிவாரண நிதியை அளிக்கிறேன். இடையூறுக்கு மன்னித்து விடுங்கள். தவறாக எடுத்துக் கொள்ளதீர்கள் என கூறினார். முதியவர் கொடுத்த 10 ஆயிரம் ரூபாய் பெரிதாக இருந்தாலும் அதை விட இந்த வயதிலும் நிதி கொடுக்க வேண்டும் என நினைத்த முதியவரின் எண்ணம் மிகப்பெரியது. இவரது புல்லரிக்கும் செயலால் போலீஸார் திகைத்ததோடு அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் முதியவரின் உதவும் எண்ணம் வலைதளங்களில் பதிவிடப்பட்டதால் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. மற்றவர்களும் உதவும் எண்ணத்தை ஊக்குவிக்கும்படியாக உள்ளது.
Leave your comments here...