தவறான வதந்திகளை நம்பி இதைப்போல் செய்யதீர்கள் – கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ஊமத்தங்காயை அரைத்து குடித்த 11 பேர் கவலைக்கிடம்.
ஆந்திராவில், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க டிக்டாக் வீடியோவில் வந்ததை பார்த்து ஊமத்தங்காயை அரைத்து குடித்த குழந்தைகள் உட்பட 11 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவின், சித்தூர் மாவட்டம் ஆரம்பல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஷ் பாபு மற்றும் சுதாகர். இவர்கள் நேற்று காலை தங்களது செல்போனில் டிக்டாக் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதில் ஊமத்தங்காய் விதையைத் தின்றால் கொரோனா வைரஸ் வராது என்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த இருவரும் தங்களது குடும்பத்தாருடன் இணைந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று ஊமத்தங்காய் விதைகளை கொண்டு வந்தனர்.
பின்னர் அதனை அரைத்து மகேஷ் பாபு, சினேகா, வீனம்மா, வெங்கடம்மா, வெங்கடேஷ், கீதா, சுதாகர், பவானி, லட்சுமி, ஹேமந்த், சாந்தம்மா என 2 குழந்தைகள் உட்பட 11 பேரும் நீரில் கலந்து குடித்தனர். இதில் சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து பைரெட்டிபல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 11 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரித்தாலும் சமூக வலைத்தளத்தால் உயிரை பறிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது வாடிக்கையாகி வருகிறது.
Leave your comments here...