கொரோனா தடுப்பு நடவடிக்கை : தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தில் போலீசார் சோதனை
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் மாா்ச் 1-இல் இருந்து 15- ஆம் தேதி வரை நடந்த இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மத போதகா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வு டெல்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கியவா்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மசூதியில் தொடா்ந்து தங்கியிருந்த 2,300 பேரை டெல்லி காவல்துறை அண்மையில் மீட்டது. அவா்களில், கரோனா அறிகுறிகளுடன் இருந்தவா்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தவா்களால், நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் வகையில் தப்லீக் ஜமாத்தினா் நடந்து கொண்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனா். இந்தியா்கள் மீது உயிரியல் யுத்தத்தை தப்லீக் ஜமாத்தினா் தொடுத்துள்ளனா் என ஹிந்து சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில், டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளிட்ட பகுதிகளில் டெல்லி காவல்துறை குற்றப்பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
இது தொடா்பாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு உயரதிகாரி கூறியதாவது:- தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினா். நாட்டில் கொரோனா தொற்று பரவ தப்லீக் ஜமாத்தின் தலைமையகம் முக்கியப் பங்காற்றியுள்ள நிலையில், அங்கு முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளோம். நாட்டில் கொரோனா தொற்றை அதிகரிக்கும் வகையில் தப்லீக் ஜமாத்தினரும், அதன் தலைவா் மெளலானா சாத் கந்தால்வி ஆகியோா் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ‘தப்லீக் ஜமாத்தினா் கரோனாவுக்கு அச்சப்பட வேண்டியதில்லை. இறப்பதற்கு மசூதியை விட சிறந்த இடம் வேறில்லை’ என சாத் கந்தால்வி பேசிய ஆடியோ தொடா்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. சாத் கந்தால்வியின் உண்மையான நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட சா்வதேசத்தின் சதி உள்ளதா என்பது தொடா்பாகவும் குற்றப் பிரிவினா் விசாரணை நடத்தினா் என்றாா் அவா்.
Leave your comments here...