கொரோனா வைரஸ் பாதிப்பு – தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 53,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது’ என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில், ஏழு பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை ரத்து செய்வதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 379 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் மற்றும் 110 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...