கொரோனா பாதிப்பு நிவாரணம் 1000 ரூபாயை வாங்க விரும்பாதவர்கள் அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி அறிமுகம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஏப். மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
அவை ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இன்று முதல் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில் 1300 — 1500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது கடைகளில் கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக எந்த தேதி நேரம் வர வேண்டும் என்ற ‘டோக்கன்’களை கார்டுதாரர்களின் வீடுகளுக்கு ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு கடையிலும் தினமும் தலா 100 கார்டுதாரர்கள் என ஏப்., 15ம் தேதி வரை 35 ஆயிரத்து 244 கடைகள் வாயிலாக 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட துாரத்திற்குள் கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதனை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது. www.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று ‘1000 ரூபாய் விட்டுக் கொடுக்க’ என்று ஒளிரும் பகுதியை ‘கிளிக்’ செய்ய வேண்டும். அதில் அலைபேசி எண்ணை பதிவிட்டதும் எஸ்.எம்.எஸ். தகவ-லில் வரும் ஒரு முறை ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும். பின் கார்டுதாரரின் விபரங்கள் அடங்கிய பகுதி திறக்கும். அதில் ‘உரிமம் விட்டுக் கொடுத்தல்’ தலைப்பை கிளிக் செய்து ‘புதிய கோரிக்கை’ என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின் உணவு தானியங்கள், 1,000 ரூபாய் அருகில் உள்ள கட்டங்களில் கிளிக் செய்து இறுதியாக ‘சமர்ப்பிக்க’ என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதேபோல் ‘tnepds’ என்ற அலைபேசி செயலி வாயிலாகவும் அவற்றில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி நிவாரணத்தை வாங்க விரும்பாதவர்கள் அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
Leave your comments here...