தப்லிக் ஜமாத் விவகாரத்தை அரசியல் மத பிரச்சனைகளாக யாரும் உட்படுத்த வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள்
டெல்லி தப்லிக் ஜமாத் விவகாரத்தை அரசியல் மத பிரச்சனைகளாக யாரும் உட்படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல் தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
"தமிழக மக்களின் நலன் கருதி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்கள் தானாக முன்வந்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" – தமிழக பாஜக தலைவர் டாக்டர்.L.முருகன் அறிக்கை.@Murugan_TNBJP pic.twitter.com/LDKuZiuv0Z
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 1, 2020
இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Leave your comments here...