மதுரையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் எம்.பி வலியுறுத்தல்..!
தேனி பாராளுமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மக்களவை குழு தலைவருமான ப.ரவீந்திரநாத்குமார் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள 133 கோடி மக்களுக்கு நீதி வழங்கும் உச்சநீதிமன்றத்திற்கு 34 நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கப்பட்டால்தான் நிவாரணம் தேடுவதற்கு சிரமப்பட்டு டெல்லிக்கு ஓடி வர வேண்டும் என்ற நிலை மக்களுக்கு உருவாகாது என்பதோடு, குறித்த காலத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு எதார்த்தமான சூழ்நிலை ஏற்படும்.
நீதி பரிபாலன முறையை சாதாரண மக்களுக்கு மிக அருகில் கொண்டு செல்ல வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் சட்டப்பிரிவு 130ன்படி பல்வேறு பிராந்தியங்களிலும் உச்சநீதிமன்ற கிளை அமைக்ப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. என் மாநிலமான தமிழ்நாட்டில், வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள மதுரையில் உச்சநீதி மன்றகிளை அமைக்கப்பட வேண்டும்.
“முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது” மற்றும் “உச்சநீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது” ஆகியவற்றின் மூலம் நிலுவையில் உள்ள 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் குறுகிய கால கட்டத்திற்குள் நீதி வழங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.உச்சநீதிமன்றக் கிளைகளை பிராந்தியங்களில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழியாகவோ, அல்லது அரசியல் சட்ட திருத்தம் மூலமாகவோ நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்ட அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்..!
Leave your comments here...