டெல்லி கலவரத்தை 36 மணி நேரத்தில் போலீசார் கட்டுப்படுத்தினர்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .

அரசியல்

டெல்லி கலவரத்தை 36 மணி நேரத்தில் போலீசார் கட்டுப்படுத்தினர்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .

டெல்லி கலவரத்தை 36 மணி நேரத்தில் போலீசார் கட்டுப்படுத்தினர்-  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .

டெல்லி ஷாகீன்பாக்கில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த பிப்ரவரி 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.


இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 53 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலித்தது. இதுபற்றி விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரண்ட நிலையில், இதற்கு பதிலளிக்க வேண்டிய அரசியல் சாசன பொறுப்பு எனக்கு இருக்கிறது என நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறினார்.


டெல்லி வன்முறை குறித்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு லோக்சபாவில் பதிலளித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:- ஒன்றுமறியாத நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாங்கள் உறுதி அளிக்கிறோம். ஆயுத சட்டத்தின் கீழ் 43 வழக்குகள் பதிவாகி உள்ளன. 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த பிப்ரவரி 25ந்தேதியில் இருந்து 650 அமைதி கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.என்னிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் உண்மையை திரித்துக்கூற யாருக்கும் உரிமை இல்லை. டிரம்ப் நிகழ்ச்சி முன்னதாகவே திட்டமிடப்பட்டது. அவர் தாஜ்மஹால் சென்ற போது, அவருடன் நான் செல்லவில்லை. அவர் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை. அச்சமயம் போலீசாருடன் கலந்தாலோசித்து, டில்லி நிலைமையை கண்காணித்து வந்தேன். பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினேன். வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிடும்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலிடம் நான் வலியுறுத்தினேன்.


குறுகிய காலத்தில் பெரிய அளவில் வன்முறை பரவுவது என்பது திட்டமிடாமல் சாத்தியமில்லை. இந்த கோணத்தில் விசாரிக்க சதித்திட்ட வழக்கு பதிவு செய்துள்ளோம். வடகிழக்கு டெல்லியில் வன்முறைக்கு நிதியுதவி வழங்கிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


டெல்லி வன்முறை சம்பவத்தின்பொழுது ஒரே நாளில் 60 சமூக வலைதள கணக்குகள் தொடங்கி 4 நாட்களில் அவை மூடப்பட்டு உள்ளன. இதற்கு பின்னால் உள்ளவர்களை போலீசார் கண்டுபிடிப்பர். வெறுப்புணர்வு தூண்டுவதற்கு சமூக ஊடகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வன்முறை சம்பவம் முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் போது தான் நாட்டில் அதிக வன்முறை நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...