இணையதளத்தில் தகவல்களை சேகரித்து, கோவில் திருவிழாக்களில் கைவரிசை : கோனியம்மன் கோவில் சிக்கிய 3 பெண்கள்!
கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் கோனியம்மன் கோயிலில் மாசி தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கியது. தேரோட்டத்துக்கான கொடியேற்றம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், கடந்த, 4ம் தேதி நடந்தது.தேரோட்டத்தின்போது, கூட்டநெரிசலை பயன்படுத்தி, 10 பேரிடம், 35 சவரன் நகை திருடப்பட்டது.
இதில் நகையை பறிகொடுத்தவர்கள் இது குறித்து பெரியக்கடை வீதி, உக்கடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ராஜ்குமார் மேற்பார்வையில் சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் ஏட்டுகள் உமா, கார்த்தி, பூபதி உள்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தேரோட்டம் சென்ற பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் அப்பகுதிகளில் சுற்றி வந்த மூன்று பெண்கள், நகைகளை திருடியது தெரிந்தது.இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட, சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி, 36, ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி, 36, பாண்டியராஜன் மனைவி இந்துமதி, 27, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறுகையில்:- உறவினர்களான மூவரும், இந்தியா முழுவதும் நடக்கும் கோவில் விழாக்கள் குறித்து இணையதளங்கள் மூலம் தகவல் திரட்டுகின்றனர். ‘தொடர்ந்து விழாக்கள் நடக்கும் பகுதிக்கு சென்று நோட்டமிட்டு, கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவர். தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது திருட்டில் ஈடுபட்டுள்ளனர்’ என அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்கள்.
இவர்கள் திருப்பதி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது கைதாகி வெளியே வந்துள்ளனர். மேலும் 10 பவுன் செயினுடன் தப்பி சென்ற இந்துமதியின் கணவர் பாண்டிய ராஜனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அதனை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
Leave your comments here...