கள்ள தொடர்பை ஊக்குவித்து வாலண்டைனின் பெயரில் காதலர் தினமா…? இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை..!

சமூக நலன்

கள்ள தொடர்பை ஊக்குவித்து வாலண்டைனின் பெயரில் காதலர் தினமா…? இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை..!

கள்ள தொடர்பை ஊக்குவித்து வாலண்டைனின் பெயரில் காதலர் தினமா…? இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக மக்கள் அருவருக்கும் நிலையில் நடைபெறும் ஆபாச காதலர் தினத்திற்கு தடைவிதிக்கக் வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:- ஐரோப்பிய நாட்டு மன்னனின் திருமணமான மகள் வேறொரு ஆணை காமத்தின் பெயரில் காதல் கொள்கிறாள். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தன் மகளின் முறையற்ற செயலை கண்டிக்கும் பொழுது அந்த பகுதியில் உள்ள வாலண்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் சர்ச்சிலேயே அந்த போலிக் காதலர்களுக்கு தகாத உறவு கொள்ள இடம் கொடுத்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட மன்னன் பாதிரியார் வாலண்டைனுக்கு மரணதண்டனை விதிக்கிறார். தகாத உறவுக்கு இடம் கொடுத்த பாதிரியார் வாலண்டைன் இறந்த நாளை பிப்ரவரி 14-ம் தேதியை அந்த நாட்டில் உள்ள ஒரு சிறுபிரிவினர் காதலர் தினமாக (Valentine Day) கொண்டாடி கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் ஒருசில நாடுகளில் பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.


பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், கற்பு நெறியிலும் உயர்ந்துள்ள பாரதநாட்டிலும், கற்புக்கரசி கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிலும் சமீபகாலமாக பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக ஒரு சிலரால் கொண்டாடப்படுகிறது. தகாத உறவுக்கு துணை போன பாதிரியாரின் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுவது நம் நாட்டின் பண்பாட்டுக் கொள்கைகளுக்கு முரணானது.

இந்துக்களும், இந்து மதமும், இந்து மக்கள் கட்சியும் காதலுக்கு ஒரு போதும் எதிரானவர்கள் அல்ல. இந்து மதத்தின் காதலின் சிறப்பை பல வழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உலகப் பொது மறையான திருக்குறளை உலகுக்கு கொடுத்த வள்ளுவப் பெருந்தகை தனது குறலில் “இன்பத்துப்பால்” என்ற ஒரு பகுதியில் உண்மைக்காதலின் மகத்துவத்தை இல்லறத்தின் தூய்மையை விளக்கியுள்ளார்.

நமது புராணங்கள், இதிகாசங்கள், தமிழர்களின் வாழ்கை வரலாற்றை, இல்லறவாழ்வை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பலகாப்பியங்களில் காதலின் மகத்துவத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதிலெல்லாம், விரசமோ, வக்கிரமோ, பண்பாட்டுக்கு எதிரான துவேஷமோ, அருவருக்கும் ஆபாசமோ, குடும்ப அமைப்பு முறையை சிதைக்கின்ற சீரழிவுகளோ சொல்லப்படவில்லை மாறாக அன்பின் அடையாளமாகத்தான் காதலை காப்பியமாக படைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்காத கொண்டாட்டங்களையோ, மேல்நாட்டின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக் கொள்ள தயங்கியதில்லை. நமது தேசத்தின் ஆன்மாவான ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், தாய், தந்தை, உறவுகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, கற்பு நெறி போன்றவற்றை திட்டமிட்டு சீர்குலைக்கும் நோக்கத்தோடு பன்னாட்டு வியாபார, வணிக நிறுவனங்கள், கிறிஸ்தவர்களின், மிஷினரிகள், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மீடியாக்களால், பரப்பப்படுகிற தேச விரோத பண்பாட்டு சீரழிவைச் செயலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.உண்மைக்காதலை போற்றுகிறோம், கலப்புத்திருமணத்தை ஆதரிக்கிறோம். ஆனால் ஆபாசமாக பண்பாடுச் சீரழிவை ஏற்படுத்தி, குடும்ப அமைப்பு முறையை பாழ்படுத்தும் ஆபாச காதலர் தினக்கொண்டாட்டத்தை எதிர்க்கிறோம்.

காதலர் தினம் என்ற பெயரில் பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்களில் சுற்றுலாத்தலங்களில் புனிதமாகக் கருதப்படும் கோவில்களில் மதுவருந்திவிட்டு ஆபாசமாக, அருவருக்கும் நிலையில் காம வெறியோடு செயல்படும் காம்க்களியாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பண்பலை வானொலிகளில் அன்றைய தினம் முன் பின் தெரியாதவர்களுக்கு போன் செய்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்.

மேலும் வியாபார நிறுவனங்களில் காதலர் தின சிறப்பு விற்பனை எனச் சொல்லி குறைந்த விலையில் உள்ள பொருட்களை, நகைகளை அதிக விலைக்கு விற்கும் மோசடிச் செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் காதலர் தின கொண்டாட்டம் எனும் பெயரில் ஜோடியாக வருகிற பொழுது பெண்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் மது வழங்கப்படும் என்றும் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்துவதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

ஆகவே தமிழக முதல்வர் அவர்கள், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்ற ஆபாச காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் காதலர் தினத்தை தடை செய்யக்கோரி வருகின்ற 10-ம் தேதி முதல் ஆபாச காதலர் தின அட்டை எரிப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் இ.ம.க. சார்பில் நடைபெறும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.


Leave your comments here...