நாங்குனேரியில் போலி குடிநீர் உற்பத்தி நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவன அதிகாரிகள் சோதனை..!!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், விஜயநாராயணம் என்ற இடத்தில் எஸ்.எஸ். அக்வா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தென்மண்டல அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவனச் சட்ட மீறல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனையின்போது, சானாஃபி என்ற வர்த்தகப் பெயர் பொறித்த ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் மற்றும் 500 மிலி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாட்டில்களில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் ஐஎஸ்ஐ முத்திரைகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிறுவனத்தின்மீது இந்திய தர நிர்ணய சென்னை அலுவலகம் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு இரண்டாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.2,00,000-க்கு குறைவில்லாத அபராதம் ஆகியன முதல்முறை விதிமீறலுக்கு விதிக்கப்படும். 2-வது மற்றும் அடுத்த விதிமீறல்களுக்கு ரூ.5,00,000-கு குறைவில்லாத அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த புகார்களை பொதுமக்கள் சென்னை, தரமணி, 4வது குறுக்குத் தெரு, சிஐடி வளாகத்தில் இயங்கும் இந்திய தரநிர்ணய நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம். புகார்களை மின்னஞ்சல் மூலம் sro@bis.org.in என்ற முகவரியிலும், 044-22541087 என்ற இலக்கத்தில் தொலைநகல் மூலமாகவும் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை அலுவலகத்தின் தொலைபேசி எண் 044-22541442 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்திய தரநிர்ணய நிறுவனம் குறித்த பொதுவிவரங்களை அதன் இணையதளமான www.bis.gov.in –ல் தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்கள்
Leave your comments here...