ஸ்மார்ட் சிட்டிகளில், வாழ்வதற்கு உகந்த மாநகரங்கள் பட்டியலில் நெல்லை முதலிடத்தில் உள்ளது..!!
வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்து வரும் திட்டங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் பிரதானமாகும். இத்திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றன.
அந்த நகரங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை, நடைபாதை, தெருவிளக்கு, கழிப்பிட வசதிகள் மட்டுமின்றி, மின்னணு சாதனங்களில் பயன்பாடு, சிசிடிவி காமிராக்கள், மேம்படுத்தப்பட்ட தானியங்கி சிக்னங்கள், நவீன பஸ் நிலையங்கள், மேம்பட்ட பூங்காக்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.இந்தியாவில் தற்போது 124 ஸ்மார்ட் சிட்டிகள் அறிவிக்கப்பட்டு, அங்கு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் இவற்றில் 12 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘வாழ்வதற்கு உகந்த நகரங்கள்(இஓஎல்ஐ)’ என்னும் அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டிகளில் பொதுமக்கள் மத்தியில் ‘தங்கள் மாநகரம் வாழ்வதற்கு சிறந்ததா?’ என்னும் கருத்து கேட்பினை நடத்தி வருகிறது. கடந்த 1ம் தேதி தொடங்கிய கருத்து கேட்பு, வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.
இதில் நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி 1445 வாக்குகளை பெற்று நெல்லை மாநகரம் முதலிடம் பெற்றுள்ளது. சண்டிகர், பெங்களூரு நகரங்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு, இணைய பயன்பாட்டில் உள்ள ஆர்வமுமே நெல்லையை முன்னிலையில் வைத்திருப்பதோடு, அடிப்படை வசதிகள் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கல்வி, மருத்துவம், குடிநீர் வசதிகள் நெல்லையில் ஓரளவுக்கு கிடைப்பது தெரிய வந்துள்ளது. மத்திய அரசு நடத்தி வரும் இந்த கருத்துகேட்பில் நிர்வாக ரீதியாக சில பதில்களை அந்தந்த மாநகராட்சியில் உள்ள 7 துறைகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக போக்குவரத்து துறை, மருத்துவ துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி ஆகியவை மாநகர பகுதிகளில் தங்கள் செய்துள்ள பணிகள் குறித்து 360 தரவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றன.
Leave your comments here...