பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கோழைத்தனமான தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றும், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்பு படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அலோக் ஜோஷி;
ஆலோசனை குழு உறுப்பினர்கள் : ராணுவப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கு விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் கடற்படை அதிகாரி மோன்டி கன்னா,இந்திய காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் ஆகியோர்ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து ஓய்வு பெட்ரா பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் இந்த குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...