சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்லாது – மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி..!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சிந்து நதி நீரை இந்தியா எந்தெந்த வகைகளில் பயன்படுத்துவது என்பதற் கான முடிவை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிந்து நதியில் கூடுதல் நீர் சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நீர், மின் திட்ட பணிகளை நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகளாக விரைவு படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல் படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனால் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீரை இந்தியா போதுமான அளவு பயன்படுத்த முடியும்.ஆறுகள் மற்றும் அணைகளில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளால் இந்திய பகுதிகளில் நீரோட்டம் அதிகரிக்கும். அந்த நீரை இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி திருப்பி விட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டம் குறையும்.ஏற்கனவே பாகிஸ்தானில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 35 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது எடுத்துள்ள முடிவால் பாகிஸ்தான் மேலும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே மேற்கு ஆறுகளில் இருந்து பயன் படுத்தக்கூடிய மின் மெகாவாட் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. கிஷன்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்ட பணிகளை விரைவாக செல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிந்து மற்றும் துணை நதிகளின் உபரி நீரோட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானுக்கு திருப்பி விடவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது மற்றும் தேசிய நலனுக்கானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். .
Leave your comments here...