சொத்து குவிப்பு வழக்கு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து..!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், அமைச்சர் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், “குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே,” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...