தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்.. பாமகவுக்கு இனி நானே தலைவர் – ராமதாஸ் அறிவிப்பு

பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன்; அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்” என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாமக தலைவரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஏப்.10) பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அறிக்கை ஒன்றை ராமதாஸ் வாசித்தார்.
அதில் அவர் கூறியதாவது: 1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவப் பணியாற்றிக் கொண்டே அரசுப் பேருந்துகளில் நின்று கொண்டே சென்று கிராமங்களில் சமூகப் பணியாற்றினேன். அதன் மூலம் மக்களை வென்றுள்ளேன். சிறு மேஜை மீது, மாட்டு வண்டி மீது நின்று பேசிவிட்டு, அடுத்த கிராமத்திற்கு மிதி வண்டியில் சென்று அக்கிராம மக்களிடம் பேசுவேன். 1987-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தி 21 பேரை இழந்தேன். 1989-ல் பாமகவை தொடங்கினேன். 95 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தேன். பின்னர் மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெற்றேன். கட்சியின் மூலம் மத்திய அமைச்சர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிவரை பெற்றோம். இவைகள் எல்லாம் என் சாதனைகளாகும்.
பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர மற்ற மத்திய சிறைகளில் உரிமைகளுக்கான போராட்டத்துக்காக அடைக்கப்பட்டேன். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாமகவினரின் வேண்டுதலால் உயிர்பெற்றேன்.
2026ம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டி பாமக நிறுவரான நானே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, அன்புமணி செயல் தலைவராக நியமிக்கிறேன். கவுரவத் தலைவராக ஜி கே மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கையை வாசித்தார். மே 11-ம் மாமல்லபுரம் மாநாடு வெற்றிகரமாக செயல்பட அனைவரும் உழைப்போம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் வேளாண் துறை வளர்ச்சி தற்போது15 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்த பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடு வளர்ச்சி அடைத்துள்ளது. இதில் வேளாண் துறையின் பங்களிப்பு 10 விழுக்காடாகும். வேளாண் மக்களுக்கும், மற்ற தொழில் செய்யும் மக்களுக்கும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இடிந்துவரும் பள்ளிகளை சீரமைக்க ரூ 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.” என்றார்.
என்ன செய்வார் அன்புமணி? ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம், பாமக சிறப்பு பொதுக்குழுவில் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, தனிக் கட்சி அலுவலகம் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார்.
இதனால் பாமகவுக்குள் விரிசல் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் அது நீர்த்துப் போகும்படி அன்புமணி ராமதாஸ் ‘எங்களுக்கு எல்லாமே தலைவர்தான்’ என்று சொல்லி முடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ராமதாஸ் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு அன்புமணி ராமதாஸ் இன்னும் எதிர்வினையாற்றாத நிலையில் அத்தனை எதிர்பார்ப்பும் அன்புமணி என்ன செய்யப் போகிறார் என்பதில் குவிந்துள்ளது.
Leave your comments here...