பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நிதி திவாரி நியமனம்.. யார் இந்த நிதி திவாரி..?

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நியமனம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யார் இந்த நிதி திவாரி..?
2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 96 வது ரேங்க் இவர் எடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி முதல் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக இவர் பதவி வகித்து வருகிறார். பிரதமர் அலுவலக பணியில் 2022ம் ஆண்டு சேர்ந்தார்.
முன்னதாக அவர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வரும் முன்பாக நிதி திவாரி, வணிக வரி துறையில் துணை ஆணையராக பணியாற்றினார். தனது பணியை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஎப்எஸ் பணி கிடைத்ததும் வணிக வரிதுறையில் இருந்து விலகி குடிமை பணிக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவில் துணை செயலராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.
அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார். பிரதமர் மோடிக்கு தற்போது இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகியோர் தனி செயலர்களாக உள்ள நிலையில், இவரும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் நிதி தவாரி, பிரதமர் மோடியின் தினசரி நிர்வாக பணிகளை கையாள உள்ளார். பிரதமர் மோடியின் மீட்டிங்குகள், அதற்கான தயார் நிலைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை தொடர்பான பணிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார். 2014 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் பயிற்சியின் போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான கோல்டு மெடல் இவர் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...