திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல்..!

திருமலை திருப்பதி தேவஸ்தான வருடாந்திர பட்ஜெட் ரூ.5,258.68 கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. ரூ.5,258.68 கோடியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மடப்பள்ளி ஊழியர்களுக்கு மாத ஊதியம் அதிகரிக்கப்படுவதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படும். திருமலையில் 772 தங்கும் அறைகள் புதுப்பிக்கப்படும். நமது நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் ஏழுமலையான் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான சொத்துகளை பாதுகாக்க புதிய கமிட்டி அமைக்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் தவிர பிற மதத்தை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். கிராமப்புறங்களில் கட்டுமானப் பணி பாதியில் நின்றுள்ள கோயில்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும். திருமலையில் அனுமதியின்றி கடை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் விஜிலென்ஸ் துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு பழைய முறைப்படி தரிசன ஏற்பாடு செய்ய விரைவில் சோதனை அடிப்படையிலான திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
204-25 உண்டியல் வருவாய்: 2024-25-ம் நிதியாண்டில் ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1,671 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது 2025-26 நிதியாண்டில் ரூ.1,729 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியாக 2024-25 நிதியாண்டில் ரூ.1,253 கோடி கிடைத்துள்ளது. இது 2025-26-ல் ரூ.1,310 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரசாத விற்பனை மூலம் 2024-25 நிதியாண்டில் ரூ.550 கோடியும், தரிசன டிக்கெட்டுகள் மூலம் ரூ.350 கோடியும், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் ரூ.130 கோடியும், தங்கும் விடுதிகள் மற்றும் தேவஸ்தான திருமண மண்டபங்கள் மூலம் ரூ.157 கோடியும், தலைமுடி விற்பனை மூலம் ரூ.176.5 கோடியும், அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளாக ரூ.85 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
Leave your comments here...