நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் – 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு..!

தமிழகம்

நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் – 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு..!

நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் – 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு..!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். அதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

மறுநாள் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். வரும் 17-ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் தொடங்கவுள்ளது. 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் பதிலளித்து பேசுவார். பின்னர், துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

100 இடங்களில் நேரலையில் காணலாம்! 

தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave your comments here...