பிரயாக்ராஜ் மகா கும்பமேளா.. உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் -வெளியான தகவல்
![பிரயாக்ராஜ் மகா கும்பமேளா.. உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் -வெளியான தகவல்](https://www.jananesan.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-2025-Rs-3000-crore-empire.jpeg)
மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தின் கரைகளில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழா பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புனிதமானதாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 29-ம் தேதி உயிரிழப்பை ஏற்படுத்திய துரதிருஷ்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்த போதிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 6 வரை திரிவேணி சங்கமத்தில் 92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடியதாகவும் இதன்மூலம் இங்கு இதுவரை புனித நீராடி மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளதாகவும் உ.பி. அரசு கூறியுள்ளது. மகா கும்பமேளாவுக்காக ரூ.1,500 கோடியை மட்டுமே மாநில அரசு ஒதுக்கியதாகவும் முதல்வர் தெரிவித்தார்
இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் மக்கள் தொகையை விட சனாதன தர்மத்தின் புனித நீரில் மூழ்கி எழுந்தவர்கள் அதிகம்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகள் பட்டியலில் சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, பிரேசில், வங்கதேசம், ரஷ்யா மெக்சிகோ ஆகியவை உள்ளன.
இவற்றில் சீனா மற்றும் இந்தியா மட்டுமே மகா கும்பமேளா பக்தர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டவை. மனித குல வரலாற்றில் எந்தவொரு மத, கலாச்சார அல்லது சமூக நிழ்ச்சியில் இவ்வளவு மக்கள் கலந்து கொண்டதில்லை” என்று கூறியுள்ளது.
மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன் இவ்விழாவில் 40 கோடி முதல் 45 கோடி வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று உ.பி. அரசு கணித்திருந்தது. ஆனால் கும்பமேளா முடிவதற்கு 12 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.
கடந்த ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசை மிகவும் சிறப்புக்குரியது என்பதால் அன்று மட்டும் 8 கோடி பதர்கள் திரிவேணி சங்மத்தில் புனித நீராடினர். அன்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்த நிலையிலும், பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...