மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது – அண்ணாமலை

அரசியல்

மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது – அண்ணாமலை

மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது – அண்ணாமலை


தமிழகத்தில் ஒரு உதவாத, மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது. தைரியம் இருந்தால், இந்து அறநிலையத்துறை ஆவணங்களை சி.ஏ.ஜி., ஆய்வு கொடுங்கள்’ என்று முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: முதல்வர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டை பொறுத்தவரையில் நேரடி நிதிப் பகிர்வு என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீட்டு திட்டம், விவசாயிகளுக்கான கிஷான் சமான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மோடி அரசு வந்த பிறகு, தமிழகத்திற்கு கொடுத்த பணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. எதன் அடிப்படிடையில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். கடந்த காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே தமிழகம் பெயர் சொல்லப்பட்டது. 6 பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரே இல்லை.

எல்லா முறையும் அனைத்து மாநிலத்திற்கும் சிறப்பு திட்டம் வராது. தமிழகத்திற்கு 2021-22ம் ஆண்டில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கொடுத்தனர். போன வருடம் ஆந்திரா, இந்த வருடம் பீஹாருக்கு கிடைத்துள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் எல்லா மாநில ஊர்திகளும் அனைத்து ஆண்டுகளும் பங்கேற்க முடியாதோ, அது போலத்தான் பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறாது. அதை வைத்து ஏன் முதல்வர் அரசியல் செய்ய வேண்டும்?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது எவ்வளவு நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டது என்றும், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? மேடை போட்டு விவாதிக்க பா.ஜ., தயார்.

மத்திய பட்ஜெட் குறித்து ஆர்.எஸ்., பாரதி விவாதிக்க தயாரா? என்று கேட்டார். நீங்கள் மத்திய பட்ஜெட் குறித்து பேசுங்கள். நாங்கள் மாநில பட்ஜெட் குறித்து பேசுகிறோம். யார் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வரட்டும்.

முதல்வருக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாகத் தான் அறிவாலயத்தில் இருந்த சில பேர், அடித்து விடுவேன், மிதித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். உலகளவில் மோடியின், இந்தியாவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிய வரும். லோக் சபா தேர்தலில் பா.ஜ., வலிமை இழந்து விட்டதாக முதல்வர் பேசினார்.

அதன்பிறகு நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பிஹாரில் வெற்றி பெறப் போகிறோம். லோக் சபா தேர்தலில் தி.மு.க., 7 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ளார். 2026 தேர்தலில் 20 சதவீதம் ஓட்டுக்களை இழப்பார்.

டப்பிங், கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முதல்வரின் பையனுக்கு தேவைப்படுகிறது. உதயநிதிக்கு டப்பிங் பண்ண சந்தானம் அண்ணன் தேவைப்படுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு டப்பிங் பண்ண அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்து கொண்டிருக்கிறார். மொத்தம் 35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான் முதல்வருக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்கள். எங்களுக்கு தேவையில்லை.

சி.ஏ.ஜி., ஆய்வுக்கு இந்து அறநிலைத்துறை ஆவணங்களை சமர்ப்பிக்க மாட்டிங்கிறாங்க. தமிழகத்தில் ஒரு உதவாத, மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது. தைரியம் இருந்தால், இந்து அறநிலையத்துறை ஆவணங்களை சி.ஏ.ஜி., ஆய்வு கொடுங்கள். ஆட்சிக்கு வந்த உடனே முதல்நாள் இந்து அறநிலையத்துறையை ஆய்வு செய்வோம்.

சென்னையில் ஒரு விமானக் கண்காட்சியை ஒழுங்காக நடத்த முடியவில்லை. அதைவிட்டு விட்டு மணிப்பூர் அரசியலைப் பற்றி பேசுகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...