சிக்க போகும் கெஜ்ரிவால்.. சொகுசு “கண்ணாடி மாளிகை” – விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு..!

இந்தியா

சிக்க போகும் கெஜ்ரிவால்.. சொகுசு “கண்ணாடி மாளிகை” – விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு..!

சிக்க போகும் கெஜ்ரிவால்..  சொகுசு “கண்ணாடி மாளிகை” – விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு..!

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்kej வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிக்க செலவிட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் டெல்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் 2015 முதல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் வரை வசித்து வந்த அரசு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அது ‘கண்ணாடி மாளிகை’ போல மாற்றப்பட்டதாகவும் இதற்காக அருகில் இருந்த நிலங்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதோடு, அதன் உள்புற அலங்காரத்துக்காக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் நேரத்தில், பிரதமர்  மோடியும் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று (பிப். 15) பேசிய பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா, “கேஜ்ரிவால் வசித்து வந்த எண்.6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவை விரிவுபடுத்துவதற்காகவும் அலங்கரிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் விதிமீறல்கள் மற்றும் ஊழல் நடந்துள்ளதாக நான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் ஏற்கனவே புகார்கள் அளித்திருந்தேன்.

அந்த புகார்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், டெல்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது. தற்போது அந்த அறிக்கையின் அடிப்படையில், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.” என தெரிவித்தார்.

டெல்லி ரோஹினி தொகுதியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ-வான விஜேந்தர் குப்தா, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அளித்த முதல் புகாரில், “8 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மாளிகையை கட்டுவதற்காக கேஜ்ரிவால் கட்டிட விதிகளை மீறி உள்ளார். ராஜ்பூர் சாலையில் உள்ள பிளாட் எண்கள் 45, 47 மற்றும் இரண்டு பங்களாக்கள் (8-ஏ மற்றும் 8-பி, ஃபிளாக் ஸ்டாஃப் சாலை) உள்ளிட்ட அரசு சொத்துக்கள் இடிக்கப்பட்டு புதிய இல்லத்தில் இணைக்கப்பட்டன. இதில், தரை பரப்பளவு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. சரியான திட்ட ஒப்புதல்கள் பெறப்படவில்லை.” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

தனது இரண்டாவது புகாரில், ஃபிளாக் ஸ்டாஃப் சாலையில் உள்ள 6வது பங்களாவின் புதுப்பித்தல் மற்றும் உட்புற அலங்காரத்தில் மிகப்பெரிய நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் குப்தா குற்றம் சாட்டி இருந்தார்.

Leave your comments here...