திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுப்பு..!
ஹோட்டல் விடுதிகள் முன்பதிவு நிறுவனமான ஓயோ தனது பங்குதாரர்களின் ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை எனும் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஓயோ நிறுவனம் தங்களுடைய செக்-இன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, திருமணம் ஆகாத தம்பதிகள் இனி அறைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், குடும்பங்கள், தனிப்பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தங்குவதற்கு அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட காலமாக திருமணமாகாத ஜோடிகளுக்கு ஓயோ நிறுவனம் தங்க அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது திடீரென தங்களது விதிகளை மாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது செக்-இன் செய்யும்போது, அனைத்து ஜோடிகளும் தங்களுடைய திருமண ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முன்பதிவுகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் முதற்கட்டமாக இந்த விதியை அமல்படுத்தியுள்ளது. தேவையைப் பொறுத்து இந்த விதி பிற நகரங்களில் அமல்படுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது.
இந்த புதிய விதியின்படி, இனி திருமணம் ஆகாத ஆண்-பெண் இணைந்து ஒரே அறையில் தங்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...