யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டு கொள்ளவே இல்லை என்பது மக்களுக்கும் நன்கு தெரியும்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்..!
குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுக்கு பிறகு சொந்த ஊரான மார்த்தாண்டத்துக்கு போலிஸ் மரியாதையுடன் எடுத்து செல்லபட்டது. அங்கு உறவினா்கள் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தியதையடுத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னா் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சோ்ந்த அப்துல் சமீம் (27), இளங்கடையை சோ்ந்த தவ்பீக் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்:-
இவ்வழக்கில், தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, விசாரணை மேற்கொண்டதுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறை இயக்குநரே நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டார். அதுமட்டுமன்றி, 8.1.2020 அன்று இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மறுநாளே 9.1.2020 அன்று சட்டப் பேரவையிலேயே முதல்-அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, மறுநாள் 10.1.2020 அன்று நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்கியும் உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து இரண்டு நாட்களாக ஒரு அனுதாபம் கூடதெரிவிக்காமல், நேரடியாகச் சென்று பெயரளவில்5 லட்சம் ரூபாயை அக்குடும்பத்தினருக்கு வழங்கிவிட்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை; இதில்தான் தமிழ்நாடு முதலிடம் என்று டுவிட்டரில் பதிவிட்டு, ஒருகாவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார். தி.மு.க. தலைவர். யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டு கொள்ளவே இல்லை என்பதும், காவல்துறையினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும், அது பற்றி தி.மு.க. தலைவர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமே இல்லை.
முதல்வர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய அன்று, களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதிகளின் செயல் என்கிறார்கள். காவல் அதிகாரி கத்தியாலும் குத்தப்பட்டுள்ளார் எனச் செய்தி.
காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை, இதில் தான் தமிழ்நாடு முதலிடம். pic.twitter.com/Cdu2aSGP78
— M.K.Stalin (@mkstalin) January 11, 2020
திமு.க. ஆட்சியின்போது காவல் துறையினர் பட்ட இன்னல்களைப் பற்றி பல்வேறு உதாரணங்களை கூறிக்கொண்டேபோகலாம். இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, தி.மு.க. தலைவர் டுவிட்டரில் இட்டுள்ள பதிவு, மக்கள் சிரிக்கத்தான் வகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Leave your comments here...