திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க 91 கவுன்டர்களில் இலவச டோக்கன்…!

ஆன்மிகம்இந்தியா

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க 91 கவுன்டர்களில் இலவச டோக்கன்…!

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க 91 கவுன்டர்களில் இலவச டோக்கன்…!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க 91 கவுன்டர்களில் இலவச டோக்கன் வரும் 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் என்று செயல் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமலா ராவ் திருமலையில் அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று ஜனவரி 10ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் 19ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படும். ஏற்கனவே 1.40 லட்சம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட்களை டிசம்பர் 24ம்தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டதில் அனைத்து முன்பதிவு செய்து கொண்டனர்.

ஜனவரி 10ம்தேதி மட்டும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 1500, மீதமுள்ள 9 நாட்களுக்கு ஒருநாளைக்கு 2000 டிக்கெட்டுகள் மற்றும் அறை ஒதுக்கீடு டிசம்பர் 23 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டு பதிவு செய்து கொண்டனர்.

ஆன்லைனில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்த நன்கொடையாளர்கள் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 10 நாட்கள் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் புரோட்டோக்கால் வி.ஐ.பிக்கள் நேரில் வந்தால் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஜனவரி 7ம்தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை  தேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஜனவரி 11 வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி இடையே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்றார்.

திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுன்டர்கள் மற்றும் திருமலையில் 4 கவுன்டர்கள் என மொத்தம் 91 கவுன்டர்களில் சொர்க்கவாசல் வழியாக சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களுக்குரிய 1.20 லட்சம் டோக்கன்கள் ஜனவரி 9ம்தேதி அதிகாலை 5 மணி முதல் வழங்கப்படும். மேலும் வழக்கமாக டோக்கன்கள் வழங்கப்படும் பூதேவி வளாகம், சீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் காம்பளக்ஸ் ஆகிய இடங்களில் மீதமுள்ள நாட்களுக்கு (19ம்தேதி வரை) தினமும் டோக்கன்கள் வழங்கப்படும்.

பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இலவச தரிசன டோக்கன் பெற ஆதார் கார்டு முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave your comments here...