அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – தலைவர்கள் கண்டனம்..!
அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின்படி, தான் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு தனது நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தனது நண்பரை அடித்து துரத்தியதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அந்த இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதி ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மாணவியை ஆபாசமாக புகைப்படங்களை செல்போனில் எடுத்ததாகவும், புகார் அளித்தால் புகைப்படங்களை வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் கூறிய அங்க அடையாளங்களின்படியும், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக பாலியல் வன்கொடுமை (64 BNS) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவியின் புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் உதவி ஆணையர் வழிகாட்டுதலின்படி, ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள்புகார்க் குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என உயர்கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், பல்கலைக் கழக பதிவாளர் முனைவர். பிரகாஷ் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பை எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக தெரிவித்துக்கொள்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்யதிக்குறிப்பில், மாநிலத் தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திலேயே மாணவிக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வெட்கக் கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.
https://x.com/EPSTamilNadu/status/1871801372561048031
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் சீர்குலைந்து விட்டதை காட்டுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,”
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
Leave your comments here...