‘இந்தி தெரியாது போடா’ என்று கூறிய உதயநிதிக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது…? அண்ணாமலை கேள்வி…!
அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.18) மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். துணை முதலமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியிலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி மக்கள் வந்து செல்லும் இடமாக பாஜக மாற்றியுள்ளது.
‘இந்தி தெரியாது போடா’ என்று கூறிய உதயநிதிக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது. உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை நடத்தும் விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய இடத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப பேசுகின்றாரா என்ற கேள்வியை மக்கள் முன்பு வைக்கிறேன்.
பழநியில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. கொங்கு பகுதியில் எனக்கு அதிக சொந்தங்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசு எடுக்ககூடிய நடவடிக்கைகளில் பாஜக மாநில தலைவராக நான் தலையிடுவதில்லை. தமிழகம் முழுவதும் எனக்கு சொந்தம் தான் என்றும் யாராக இருந்தாலும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அவர்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்,
அல் உம்மா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். குறிப்பாக பாட்ஷா-வுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. பரோலில் வந்த அவர் உயிரிழந்த நிலையில் அவரை மத அடிப்படையில் அடக்கம் செய்யுங்கள். ஆனால் நாங்கள் தியாகிகளை விதைத்துள்ளோம் என அரசியல் கட்சிகள் கருத்துக்களை கூற வேண்டியதில்லை. அவரது இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி வழங்கியுள்ளனர். அண்ணன் சீமானின் பேச்சை மக்கள் முழுமையாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
பாஜக எப்போதுமே இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பானவர்கள். பயங்கரவாதத்திற்கு தான் எதிரானவர்கள். பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் யாரையும் தடுக்க மாட்டோம் என்று கூறிய காவல்துறை வெள்ளிக்கிழமை நடக்கக்கூடிய பாஜகவின் பேரணிக்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். என்ஐஏ குற்றப்பத்திரிக்கையை நன்றாக படித்தால் எந்த அளவிற்கு ஆழமாக கோவையில் பயங்கரவாதம் இருக்கிறது என்பது தெரியும்.
அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். நான் மாநில தலைவராக வந்த பின் மாவட்ட செயலாளர்களில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை திமுக எண்ணி பார்க்க வேண்டும். காங்கிரஸ் அம்பேத்கரை அவமானப்படுத்தவில்லையா. இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுத்துவிட்டு அம்பேத்கரை ஏன் மறந்தார்கள்.
1980-ல் ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகு ஜனதா கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அதன் பிறகு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தவெக கட்சி தலைவர் விஜய் கோவாவிற்கு சென்ற போது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. இதுதான் திமுக காட்டக்கூடிய அரசியல் நாகரீகம். நடிகர் விஜய் தமிழக அரசியலை உற்று கவனிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அம்பேத்கர் சொன்னபடி அரசியல் செய்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்தது யார் என்பதை அவர் சுட்டிக்காட்ட வேண்டும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம். பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
Leave your comments here...