ஒரு குகேஷ் லட்சக்கணக்கான குகேஷை உருவாக்க வேண்டும்… உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்விளையாட்டு

ஒரு குகேஷ் லட்சக்கணக்கான குகேஷை உருவாக்க வேண்டும்… உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

ஒரு குகேஷ் லட்சக்கணக்கான குகேஷை உருவாக்க வேண்டும்… உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பாராட்டு விழாவில்  முதல்வர் ஸ்டாலின்

குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தமிழகத்தில் ‘கிராண்ட் மாஸ்டர்’களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக அண்ணா சாலையில் இருந்து விழா நடக்கும் மேடைக்கு திறந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். கலைவாணர் அரங்கில் குகேஷை பாராட்டி, ரூ. 5 கோடி பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதன் பிறகு குகேஷ் பேசியதாவது: சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நடைபெறவில்லை என்றால் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வாகியிருக்க முடியாது. கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வானதால் தான் உலக சாம்பியனாக முடிந்தது; கனவு நனவானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். இங்கு அமர்ந்துள்ள குகேஷ் பெற்றோரை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரின் விளையாட்டு திறன், மன உறுதி, முயற்சியுடன் புன்னகையுடன் கூடிய முகமும் தான் வெற்றிக்கு காரணம். அவரின் உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு குகேஷ் லட்சக்கணக்கான குகேஷை உருவாக்க வேண்டும். 2001 , 2007 ல் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவரை பாராட்டி, நிதி வழங்கினார். விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் இருவரும் சாம்பியன் ஆனபோது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி பாராட்டி கவுரவிக்கும் வாய்ப்பு தி.மு.க., அரசுக்கு கிடைத்து உள்ளது.

விளையாட்டு துறையையும் வீரர்களையும் எப்போதும் போற்றி பாதுகாக்கும் அரசு தி.மு.க., அரசு. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் விளையாட்டை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழக அரசின் திட்டங்களினால், இளைஞர்கள் விளையாட்டை வாழ்க்கையாக எடுத்து வெற்றி பெறுகிறார்கள். மத்திய அரசின் விருதுகளும், பல அமைப்புகளின் அங்கீகாரமும் தமிழகத்தை நோக்கி வருகிறது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் என சொல்லும் அளவுக்கு சிறப்பாக பணியாற்றும் உதயநிதிக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். அவருக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.

இந்தியாவில் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 35 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். திறமை வாய்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்க தமிழக மேம்பாட்டு ஆணையம் மூலம் செஸ் விளையாட்டுக்கு என ‘home of chess’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும். குகேஷ் வெற்றி, நம்பிக்கை, சிறப்பு அகடமியால் தமிழக கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.

கல்வி, விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும். அரசு ஏற்படுத்தும் வாய்ப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் லட்சியத்தில் வெற்றி பெற எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். நமக்கு பெருமை, விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக உதயநிதி பேசியதாவது:செஸ் என்றால் சென்னை… சென்னை என்றால் செஸ்… என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தம்பி குகேஷ் சாதனை அமைந்துள்ளது. குகேஷ் பெற்றோர் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்களோ அதே போல் நம் அரசும் மகிழ்ச்சியாக உள்ளது; இந்த வெற்றி, கிரிக்கெட்டைப் போல் செஸ் விளையாட்டையும் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் இவ்வாறு அவர் பேசினார்.

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், செஸ் விளையாட்டில் உலகளவில் தமிழகம் தான் நம்பர் ஒன் என்று சொல்லலாம். நாட்டின் முதல் சர்வதேச மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர், பெண் கிராண்ட் மாஸ்டர் என அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

Leave your comments here...