கல்வி உதவித்தொகை: வருமான உச்ச வரம்பை உயர்த்துக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
கல்வி உதவித் தொகைக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆண்டுதோறும் தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 லட்சம் என நிர்ணயித்துள்ள நிலையில், அதை உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு 8 லட்சம் ரூபாயாக மாற்றி அமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப இப்பிரிவினர்களுக்கான உதவித் தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால் , இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் என தெரிவித்துள்ளார்
Leave your comments here...