கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை CBI விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு – ஓபிஎஸ் கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற தயக்கத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கினை தாமதப்படுத்த நினைக்கிறதோ என்னவோ தெரியவில்லை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கள்ளச் சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர் மற்றும் காவல் துறையினருக்கிடையே தொடர்பு இருப்பதாகவும், சிபிசிஐடி விசாரணை என்பது நியாயமாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றமே சிபிசிஐடி மீது அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என அப்பொழுதே நான் அறிக்கை வெளியிட்டேன். மற்ற அரசியல் கட்சிகள் சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. திமுக அரசின் இந்தச் செயல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதோடு, குற்றவாளிகளை தப்பிக்கவிட திமுக அரசு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.
கள்ளச் சாராயம் காய்ச்சுவது என்பது சமூக விரோதச் செயல். இந்தச் செயல் மக்களுடைய உயிருடன் விளையாடுவதற்குச் சமம். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. திமுக அரசினுடைய கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இந்த நிலையில், மேற்படி வழக்கினை சிபிஐ-டம் ஒப்படைப்பதில் திமுகவிற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. ஒருவேளை சிபிஐ இதனை விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற தயக்கத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கினை தாமதப்படுத்த நினைக்கிறதோ என்னவோ தெரியவில்லை.
ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனையிலும் திமுகவினரின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் வலுவாக எழுந்துள்ளது. எது எப்படியோ, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கினை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டினை திரும்பப் பெற்று, மேற்படி வழக்கினை சிபிஐ விசாரிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று முதலமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...