திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசுப்பணி..!

சமூக நலன்

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசுப்பணி..!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசுப்பணி..!

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை கனிமொழி எம்.பி வழங்கினார் .

 

 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் தெய்வானை (26) என்ற பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார்.

இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி மாலை, யானையின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. இதனை கண்ட யானையின் பாகன் உதயகுமார் தடுக்க முயன்ற போது இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த உதயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு , திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்து தருவோம் என்றும், பாகனின் மனைவி ரம்யாவிற்கு திருக்கோயில் பணிக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும் உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சமும், மற்றொரு நபரின் குடும்பத்துக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் நிதி உதவியாக திருக்கோயில் சார்பில் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் உயிரிழந்த பாகனின் மனைவி ரம்யாவிற்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை கனிமொழி எம்.பி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...