அயோத்தி ராமர் கோவில்: ராஜஜென்ம பூமி நியாஸ் தலைவர் மஹந்த் நிரிதியா கோபால் தாஸூக்கு Z பிரிவு பாதுகாப்பு..!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
‘இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளை தலைவராக மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ராஜஜென்ம பூமி நியாஸ் தலைவராக மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் செயல்படுவார். இவரது மேற்பார்வையின் கீழ் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெறும்.
இந்நிலையில் மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் கடந்த 2001-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இவரது உயிருக்கு அன்றிலிருந்தே அச்சுறுத்தல் இருந்து வந்ததால் அப்போது ‘ ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது ராம ஜென்ம பூமி நியாஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Leave your comments here...