ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி..!
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியை வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாகவும் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் இடைவிடாது பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளக்காடானது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புதுச்சேரியில் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்கு பின்பு புதுச்சேரியில் பல பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.மழை வெள்ளத்தில் சிக்கி புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் அரசு தரப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மக்கள் தங்கும் முகாம்களாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் ஆய்வை முதல்வர் ரங்கசாமி இன்று மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செமீ அளவுக்கு பெய்த மழையே அதிகமான மழைப்பதிவாக இருந்தது. தற்போது 50 செ.மீ மழை பதவாகியுள்ளது. கடல் சீற்றம் இருப்பதால் நீர் உள்வாங்கவில்லை. அதனால் வாய்க்காலில் நீர் நிரம்பி நகரில் பாய்ந்துள்ளது. மழை விட்டால் தண்ணீர் வடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர் உட்பட பல தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசிடம் உதவி கேட்போம். புதுச்சேரியில் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும். புயலால் உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் தரப்படும். அனைத்து துறைகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
5 மாவட்டங்களில் விடுமுறை: அதிகனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளநீர் இன்னும் வடியாத சூழலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நாளை (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்.. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...