சரியாக சிகிச்சை அளிக்கவில்லை.. தாய் பாசத்தில் தான் என் மகன் இப்படி செய்துவிட்டான் – டாக்டரை கத்தியால் குத்தியவரின் தாயார் பரபரப்பு பேட்டி..!
என் மகன் செய்ததை சரி என்று கூறவில்லை. எனக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதனையில் என் மகன் அப்படி செய்து விட்டான்,” என்று டாக்டரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் பிரேமா கூறினார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கைதான இளைஞர் விக்னேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைதான இளைஞர் விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து டாக்டர் பாலாஜியிடம் கேட்டேன். மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு டாக்டர் பாலாஜியிடம் கேட்டதால், அவர் என்னை கீழே தள்ளினார். இதனால், அவரை கத்தியால் குத்தினேன், எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விக்னேஷின் தாயார் பிரேமா கூறியதாவது: எனக்கு 3 பசங்க இருக்கிறார்கள். போன ஆண்டு நவம்பரில் எனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். அப்போது, எனக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக 3 லட்சம் ஆகும் என்று கூறியதால், வீட்டுக்கு வந்து விட்டோம். அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு 95 ஆயிரம் செலவு செய்தேன். டிசம்பர் 30ம் தேதி ஊசி போட்டார்கள். அடுத்த ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன் என்று கூறி, ஜனவரி 1ம் தேதி வீட்டுக்கு வந்தேன்.நந்தினி எனும் தெரிந்த நர்ஸ் சொன்னதை கேட்டு, கிண்டி மருத்துவமனைக்கு சென்று பாலாஜி எனும் டாக்டரை பார்த்தேன். ஜனவரி 10ம் தேதி இங்கேயே எல்லா ஊசியை போட்டுகிறியாமா என்று டாக்டர் பாலாஜி கேட்டார். எனக்கு 2வது ஸ்டேஜ்னு சொன்னாரு. அதுப்புறம் 5வது ஸ்டேஜ்னு சொல்றாங்க.
அதுக்கப்புறம் 14ம் தேதி வந்து அட்மிட் ஆனோம். 14, 15, 16, 17, ஆகிய தேதிகளில் ஊசி போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. கீமோ சிகிச்சையின் போது, உடம்பு பிரச்னை குறித்து சொன்னால், அசிங்கம் அசிங்கமா திட்டுவார். கேன்சர் என்று சொல்லாமல், காய்ச்சல் என்று சொல்லி காலை 10 மணி முதல் 5.30 மணி வரை உட்கார வச்சு அனுப்பீட்டாங்க. அப்போது, அங்கிருந்து தலைமை டாக்டர் சொன்னதனால், எனக்கு சிகிச்சை கொடுத்தாங்க. 18 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். விருகம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றேன். அங்கு மருத்துவர் பரிந்துரைப்படி, சபிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றேன். அங்கு என்னை காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. என்னுடைய உடம்பில் என்ன பிரச்னை என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து இருக்க வேண்டாமா? ஒரு செல்போனில் வரும் பிரச்னையை நம்மால் கண்டு பிடிக்க முடியும் போது, 25 ஆண்டு கால அனுபவமிக்க டாக்டருக்கு என் உடம்பில் உள்ள பிரச்னையை கண்டுபிடிக்க முடியாதா?
5 கீமோ சிகிச்சை வரையில் என்னுடைய நுரையீரல் நன்றாக இருந்தது. அதன்பிறகு தான் பழுதானது. கடந்த 10 நாட்களாக என் மகன் என்னை பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டான். எனக்கு உடை எல்லாம் அவன் தான் மாற்றி விடுவான். நான் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் கூறியதால், அந்த மனவேதனையில் இருந்திருப்பான். நான் படும் கஷ்டத்தை பார்த்து இப்படி செய்து விட்டானோ? என்னுடைய மகன் நேரடியாக கத்தியால் குத்தி விட்டான். பொய் இல்லாமல் உண்மையை சொல்றேன். இங்க 3 பேரு வந்து வீட்டை சோதனை பண்ணி, என்னுடைய பைல் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க. 6வது மாதம் நுரையீரல் பழுதான ஸ்கேன் எல்லாம் அதுல தான் இருக்கு. இப்ப அதனை எடுத்துட்டு போய்ட்டாங்க. நான் கிண்டி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது, அந்த பைல்ல அது எல்லாம் இல்லைனா, நாம் சும்மா விடமாட்டேன்.
எங்க அம்மாவுக்கு நுரையீரல் பழுதானதை பார்த்து ஏன் சொல்லவில்லை என்ற கோபம் தான் என் மகனுக்கு. அந்த ஸ்கேனை அவரு பார்த்திருந்ததால், இப்படி நடந்திருக்குமா?
என் மகன் செய்ததை சரி என்று சொல்லவில்லை. ஆனால், டாக்டர் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டுவார். நோட்டை தூக்கி வீசியடித்தார். நான் டாக்டரா, நீ டாக்டரா என்று அடிக்கடி கேட்பார். எனது 2வது மகன் ஆளை கூப்பிட்டு போலாம் என்று சொன்னான். நான் வேணாம் என்று சொல்லி விட்டேன். எனக்கே கடும் கோபம்தான்.இவ்வாறு பிரேமா கூறினார்.
Leave your comments here...