புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என பேசுகின்றனர்… பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – முதல்வர் ஸ்டாலின்..!
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க., அழிய வேண்டும் என பேசுகின்றனர். தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர்’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது. 3 கோடி செலவில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ.80.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 பன்னோக்கு மைய கட்டடங்கள் திறக்கப்பட்டது. மகளிர் உடற்பயிற்சிக்கூடம், நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாடினார். முதல்வர் பதிப்பகத்தைத் திறந்து வைத்து, பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்துவோம். இதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது. அவரது உயிரை பறித்துவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு நிச்சயம் பணிய தான் போகிறது.தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சியில் ஏதுவும் நடக்க வில்லை என சிலர் குறை சொல்கின்றனர். தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டோம். தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு திட்டமாக அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது.
திட்டங்களை எளிதில் அறிவிக்கலாம். நிதியைக் கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் கண்காணிக்க வேண்டும். திட்டங்களை முறையாக, கண்காணித்து நிறைவேற்றுகிறோம் என்பது நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். திராவிட மாடல் அரசின் செயலால் தொழில்முனைவோர் தமிழகத்தை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க., அழிய வேண்டும் என பேசுகின்றனர்.
தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர். வாழ்க வசவாளர்கள் என அண்ணாதுரை கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் பணி மக்களுக்கானது. தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Leave your comments here...