லண்டனில் இருந்து தமிழகம் திரும்பும் அண்ணாமலை – ஜனவரியில் கிராமங்களில் நடைபயணம்..!

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ல் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அண்ணாமலை நடைபயணத்துக்கு திட்டமிட்டுள்ளார் என்று கேம்பிரிட்ஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
லண்டன் கேம்பிரிஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 1300 வருடம் உடைய ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சில நாடுகளில் ஜனநாயகம் 200 முதல் 300 வருடங்களாக இருக்கிறது. எல்லா தேர்தலிலும், எல்லா அரசியல்வாதிகளும் மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்வார்கள்.
நானும் மாற்றம் வேண்டும் என்று போராடி கொண்டு இருக்கிறேன். 1300 வருடங்களாக மாறாத விசயத்தை நாம் என்ன மாற்ற போகிறோம் என்பது தான் முக்கியம்.
அரசியலில் மாற்றம் என்பது சின்ன முன்னேற்றம். ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை எடுத்து கொண்டாலும், 2 சதவீதம் தான் இலக்கை அடைவார்கள். காமராஜர் மாதிரி இன்னொருவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியுமா என்றால் அது நிச்சயமாக கிடையாது. அதேபோல் என்.டி. ராமராவ் போல புகழ்பெற்ற அரசியல்வாதி உருவாக முடியுமா என்றால் அது நிச்சயமாக கிடையாது. இதனை தாண்டி புதிதாக வருபவர்கள் மற்றும் என்னை போன்றவர்கள் என்ன செய்ய போகிறோம் என்றால், அது தான் சின்ன சின்ன மாற்றங்கள். நல்ல மனிதர்களை கொண்டு வர வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். படித்த நபர்கள் அரசியலுக்குள் வர வேண்டும்.
சின்ன விஷயங்களை சரிசெய்து, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் தான் தமிழக பா.ஜ., ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 வருடங்களாக, என்னால் முடிந்தது, கட்சியால் முடிந்தது மற்றும் கட்சி தலைவர்களால் முடிந்தது செய்து கொண்டு இருக்கிறோம். கூட்டணி உடன் தேர்தலை சந்தித்து விட்டோம். கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தோம். கடந்த 20 ஆண்டு காலமாக, தமிழகத்தில் பா.ஜ., 5 மற்றும் 6 இடங்களில் தேர்தலில் போட்டியிட்ட கட்சி, லோக்சபா தேர்தலில் கூட்டணி உடன் 39 இடங்களிலும் போட்டியிட்டோம்.
அரசியலுக்கு வந்த பிறகு, குட்டி பிரேக் எடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். 3 வருடங்களாக களத்தில் என்ன வேலை செய்துள்ளேன், என்ன வேலை செய்யவில்லை என்பது தெரிந்து கொள்ள இந்த 3 மாதங்கள் இடைவெளி தேவைப்படுகிறது. காலையில் இருந்து இரவு வரை களத்தில் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது யோசிக்க முடியாது. 8 மாத காலமாக நடைபயணம் மேற்கொண்டோம். மக்களிடம் இருந்து 40 ஆயிரம் புகார்களை வாங்கி இருக்கிறோம்.
மக்களின் பிரச்னை முழுமையாக தெரியும். எனக்கு 3 மாத இடைவெளி மிகப்பெரிய வரப்பிரசாதம். 70 சதவீதம் படிப்பு முடிந்துவிட்டது. தமிழக அரசியலை புதிய பார்வையுடன் அணுக முடியும். எனக்கு முன்பும் தமிழக அரசியல் ஆயிரம் ஆண்டு காலம் இருந்தது. எனக்கு பின்பும் தமிழக அரசியல் ஆயிரம் ஆண்டுகாலம் இருக்கும். சிறிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது சிறிய முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறே
மிக முக்கியமானது நம்பிக்கை. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 39 சதவீத பூத்களில் முதல் அல்லது 2ம் இடத்தை பிடித்துள்ளது. இது சாதாரணமான விஷயம் அல்ல. எங்கள் அரசியல் சித்தாந்தத்தை கொண்டு வர முடியாது என்று சொன்ன இடத்தில், மக்கள் திரும்பி பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 72 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 2ம் இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க.,போன்ற பெரிய கட்சிகள் , ஆளும் கட்சிகயை தாண்டி 2ம் இடத்தை பிடித்துள்ளோம். வரும் தேர்தல்களில் அதிக தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும்.
மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஒரு கொள்கை கொண்டு வரும் போது, அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு படித்தவர்கள் வேண்டும். மாற்றங்களை விரும்புபவர்கள் வேண்டும். இன்னும் வேகமாக, ஆக்ரோஷமாக யோசிக்க வேண்டும். 234 தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசிவிட்டோம். கிராமங்களை நோக்கி மக்களை சந்திக்க வேண்டும். கிராமத்தில் இன்னும் பிரச்னைகள் இருக்கிறது.
பா.ஜ.,வை அவர்கள் வித்தியாசமான பார்வையில் பார்க்கிறார்கள். அதனை நாம் எப்படி மாற்ற போகிறோம். பிறந்த ஊரில் மாற்ற வேண்டும். வரும் காலத்தில் எத்தனையோ வெற்றிகளை பார்த்தாலும் கூட, முதல் இரண்டு தோல்விகள் மனதில் இருக்க வேண்டும். கடினமான பாதையில் பயணம் செய்து தான் ஆக வேண்டும்.
தனிமனிதனை சார்ந்த கட்சி இல்லை என்பதால் பா.ஜ.,வுக்கு வந்தேன். ஒரு தனிமனிதனை சார்ந்த கட்சி அவர் சாயும் போதும் கட்சியும் சாயும். தமிழக அரசியல் என்பது உலக அரசியலாக மாற வேண்டும். சிறிய பெட்டிக்குள் அடைக்க பார்க்கிறார்கள். இதற்கு தமிழகத்தில் தேசிய கட்சி வேண்டும்.
மோடி இருக்கும் பா.ஜ., கட்சி தமிழகத்தில் வேண்டும். இது போன்ற தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். 100 வருடம், 200 வருடத்திற்கு ஒரு முறை தான் கிடைப்பார்கள். அப்போது கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். யாரையும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்ய மாட்டோம். உலகம் முழுவதும் திருவள்ளூவர் சிலை அமைப்போம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். தமிழகத்திற்கு மட்டும் பிரதமர் மரியாதை அளித்தார். மொத்தமாக தமிழகத்தில் 39 எம்.பிக்கள் தான் இருக்கிறார்கள். 39க்கு 39 அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ மற்றும் புதியதாக வந்தவர்கள் வாங்கினாலோ கூட, இந்திய அரசியலில் அவர்கள் ஒரு கமா, புள்ளியாக தான் இருப்பார்கள்.
ஒரு வருட மத்திய அரசு பட்ஜெட் ரூ.44 லட்சம் கோடி. தமிழக பட்ஜெட் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கோடி. தமிழக அரசியல்வாதிகளுக்கு தேசிய அரசியல் பார்வை வர வேண்டிய நேரம். ‘இரு மொழி கொள்கை மட்டும் தான்’ என புதியதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் வரை இதை மட்டும் தான் பேசுகிறார்கள். 60 வருடமாக வண்டி ஓட்டும் கட்சியும் அதை தான் பேசுகிறது. மக்களின் பார்வை மாறி விட்டது என்பது புரியவில்லை. தமிழகத்தில் கட்சி ஆரம்பிப்பவர்கள் தேசிய பார்வையுடன் கட்சி ஆரம்பித்தார்கள் என்றால், முதல் பாராட்டு என்னிடம் இருந்து தான் போகும். மத்திய அரசு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் இருக்கும் கட்சிகள் பின்நோக்கி செல்கிறார்கள். ஒரு மொழிக்கு ஒரு மொழி போட்டியில்லை என்று நினைக்கிறேன். அனைத்து மொழிகளும் தெரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு நிறைய நன்மை இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசு இரண்டு மொழிதான் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்;
மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர மாட்டோம் என்று சொல்வதை அகங்காரம் என்று சொல்கிறேன்.தலைவர்களை பார்த்து ஓட்டளிக்க வேண்டும். கிராமத்தை நோக்கி படையெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அடுத்த 365 நாட்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும். உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...