சபரிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி..!
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்தது.
2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ந் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த சலுகை நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும் மாத பூஜை காலங்களில் இந்த சலுகை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...