இந்திய கடற்படை ஆண்டு விழா… சென்னை-கன்னியாகுமரி கார் பேரணி நிறைவு..!
இந்திய கடற்படை ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்பட்ட கார் பேரணி, 6 நாட்களில் 1800 கிமீ பயணித்து கன்னியாகுமரி சென்று, மீண்டும் சென்னை திரும்பியது. அவர்களை தமிழ்நாடு & புதுவை பகுதி கடற்படை தலைவர் ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா, ஐஎன்எஸ் அடையாறு வளாகத்தில் வரவேற்றார்.
முன்னதாக இப்பேரணியை ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா கடந்த 17-ம் தேதி சென்னையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். கார் பேரணியில் சென்ற கடற்படை வீரர்கள், தமிழ்நாட்டின் கடல்சார் பாரம்பரியமிக்க பல இடங்கள் வழியாக பயணித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்களது பேரணியை நிறைவு செய்தனர்.
வழியில் பல்வேறு கல்வி நிலையங்களில் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கடற்படை பற்றியும், அதில் சேர்வது பற்றியும் விளக்கங்கள் அளித்தனர். இப்பயணம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்திய கடற்படை வரும் டிசம்பர் 4-ம் தேதி தனது ஆண்டு விழாவைகொண்டாட இருக்கிறது. அதையொட்டி நாடு முழுவதும் கடற்படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ் உருவாவதற்கு வித்திட்ட 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, இந்திய கடற்படை தீரமுடன் செயல்பட்டு, கராச்சி துறைமுகத்தில் நான்கு போர்கப்பல்களை மூழ்கடித்தது.
இது போரில் இந்தியா வெற்றிபெற முக்கிய பங்களிப்பை வழங்கியது. அதனை நினைவுகூரும் வகையில் அந்நாள் இந்திய கடற்படை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய கடற்படை நாட்டின் மிக நீண்ட கடல் எல்லைகளை பாதுகாப்பதுடன், அதன் பரந்து விரிந்த தனிப்பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் உரிமைகளையும், கடல்சார் வணிகம் உள்ளிட்ட நாட்டின் நலன்களையும் உறுதி செய்து வருகிறது. அதன் போர்க்கப்பல்கள், இந்தியாவின் நல்லெண்ண தூதுவராக பல நாடுகளுக்கும் சென்று இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த துணை நிற்கிறது.
மேலும், பல நாடுகளுடனும் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு, இந்திய அரசின் கடல்சார் அமைதிக்கான முயற்சிகளுக்கு துணைபுரிகிறது. இதுதவிர, இயற்கை பேரிடர் போன்ற சவாலான வேளைகளில் மனிதாபிமான உதவிகளை இந்தியாவிற்குள்ளும், மற்றும் உலகின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் செய்கிறது.
Leave your comments here...