மாலத்தீவில் இந்தியாவின் உதவியுடன் “யுபிஐ” பண பரிவர்த்தனை அறிமுகம்..!

இந்தியா

மாலத்தீவில் இந்தியாவின் உதவியுடன் “யுபிஐ” பண பரிவர்த்தனை அறிமுகம்..!

மாலத்தீவில் இந்தியாவின் உதவியுடன்  “யுபிஐ” பண பரிவர்த்தனை அறிமுகம்..!

இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ., வசதி மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., வசதி உள்ளது.

இந்தியாவில் அன்றாட பணப்பரிவர்த்தனை செயல்பாடுகளை எளிமையாக்கும் விதமாக, மத்திய அரசு சார்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு யுபிஐ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த யுபிஐ கட்டமைப்பு, பணப்பரிவர்த்தனையில் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கியது. பெருவணிக வளாகங்கள் தொடங்கி சாலையோரம் இயங்கக் கூடிய கடைகள் வரை யுபிஐ மூலம் எளிமையாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் தாக்கத்தால் வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை உருவாக்கும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே யுபிஐ கட்டமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், மாலத்தீவில் தற்போது யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அந்நாட்டில் யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்கும் பணியை ‘ட்ரேட்நெட் மாலத்தீவு கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், , ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு பங்களிக்க வேண்டுமென அதிபர் முய்சு வலியுறுத்தியுள்ளார்.

மாலத்தீவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை அதிகளவில் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம், அதன் செயல்பாடு கவனிக்கத்தக்க மாற்றத்தை பெறும் என நம்பப்படுகிறது.

இது குறித்து அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், ‘மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் யுபிஐ குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய நிதி கட்டமைப்பு, விரைவான பணப் பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இதன்மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய மின்னணு பணப்பரிவர்த்தனை தளங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது. நம் நாட்டில் நடைபெறும் மொத்த பணப்பரிவர்த்தனைகளில் 40 விழுக்காடு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், யுபிஐ மூலம் ஒரு வினாடிக்கு 3 ஆயிரத்து 729 பரிவர்த்தனைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...