நடிகர் விஜயின் தவெக மாநாடு.. அரசின் அனுமதி இல்லாமல் மாநாட்டு திடலில் பனங்கன்றுகள் வெட்டப்பட்டதால் சர்ச்சை..!
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள திடலின் அருகில் இருந்த பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனங்கன்றுகளை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஒவ்வென்றிலும் 16 விளக்குகள் வீதம் 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 60 அடி அகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலின் இருபுறமும் தொண்டர்கள் வசதிக்காக 300 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலின் உள்ளே செல்லும் மின்வாரிய கம்பிகளை அகற்றி கேபிளாக பூமிக்கடியில் புதைக்க மின்வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் மாநாடு நடைபெறும் தினத்தில் திடலுக்குள் செல்லும் மின் கம்பிகள் வழியாக மின்சாரம் செல்வதை தடை செய்ய உள்ளனர்.
திடலில் உள்ள கிணறுகளை, இரும்பு கர்டர்கள் மீது மரப்பலகைகள் அமைத்து மூடப்படுகிறது. தொண்டர்களுக்கு மாநாட்டு திடலில் உணவு வழங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனால் கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டு திடலின் அருகில் இருந்த 2 பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனங்கன்றுகளை வெட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மரம் ‘பனை’
தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை ஆகும். இது வனவிலங்குகளுக்கு உணவு, நமது கால்நடைகளுக்குத் தீவனம், நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுதல், பல்லுயிர்ப் பெருக்கம், மனிதனுக்கு வேலைவாய்ப்பு என்று வேரில் இருந்து பழம் வரை அத்தனையும் பயனளிக்கக் கூடியது. மேலும் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது பனை. ஆனால், பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து பனை மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பனையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் பலரும் இதைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
Leave your comments here...