பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு – சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி பங்கேற்பு..!

இந்தியா

பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு – சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி பங்கேற்பு..!

பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு – சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி பங்கேற்பு..!

பெங்களூரில் வரும் 20ல் நடக்கும் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாட்டுக்கு திரளான தமிழர்கள் வரும்படி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு அரண்மனை மைதானம், 9வது நுழைவு வாயிலில் உள்ள, ‘பிரின்சைஸ் ஸ்ரைன்’ அரங்கில், வரும் 20ம் தேதி மாநாடு நடக்கிறது.

முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், பெங்., தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், தமிழ் ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். பின், மாநாட்டை சிறப்பாக நடப்பது குறித்து 18 துணை குழுக்களுடன், எஸ்.டி.குமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர் கூறியதாவது: கர்நாடகாவில் தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள அற்புதமான நேரமிது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் வருகின்றனர். மாநில வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய மாநாடு நடத்தப்படுகிறது.

முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி உட்பட அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். குடகு, சோம்வார்பேட்டை, தரிகெரே எம்.எல்.ஏ.,க்கள் பஸ்கள் மூலம் தமிழர்களை அனுப்பி வைக்கின்றனர். தமிழர்களுக்காக நடத்தப்படும் மாநாடு என்பதால், வெவ்வேறு பகுதிகளில் இருந்து, ரயில், பஸ், கார், வேன்கள் மூலம் மாநாட்டுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், போலீஸ் கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. மதியம் வரை அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும், அதன்பின், கன்னட கவியரங்கம், தமிழ் கவியரங்கம் நடக்கும். தமிழ் அமைப்பு பிரமுகர்களுக்கு பாராட்டு விழா நடக்கும். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். சிறப்பு மலர் வெளியிடப்படும்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் கொண்ட உணவு திருவிழா, கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியை பார்க்க வர உள்ளனர். பஸ், ரயில் நிலையத்தில் தமிழர்களை இலவசமாக அழைத்து வருவதற்கு ஆதர்ஷா ஆட்டோ சங்கம் சார்பில், 25 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு, 500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...