கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா – பாஜக-வில் இணைந்தார்…!
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா இன்று புதன்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஸ்ரீலேகா கூறுகையில், “நான் கடந்த மூன்று வாரங்களாக ஆலோசித்து பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பார்த்துதான் பா.ஜ.க-வில் இணைந்தேன். நான் 33 ஆண்டுகளாக நடுநிலையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றினேன். உறுதிமொழி எடுத்துக்கொண்டதைப் போன்று நான் எந்த கட்சியிலும் இணையாமல் செயல்பட்டேன். ஓய்வுக்கு பிறகு நான் பல விஷயங்கள் வெளியில் நின்று மற்றொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.
அதன் பிறகு, என் அனுபவத்தின் அடிப்படையிலும், என் புரிதலின் படியும் மக்களுக்கு சேவை செய்ய இதுதான் வழி என உணர்ந்துகொண்டேன். மக்களுக்கு தொடர்ந்து சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பு இது என எனக்குத் தோன்றியது. எனக்கு பா.ஜ.க-வின் லட்சியத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் அவர்களுடன் நிற்கிறேன். இப்போது உறுப்பினராக மட்டுமே இணைந்துள்ளேன். தேர்தல் பற்றியோ அதில் போட்டியிடுவது பற்றியோ என்னால் இப்போது கூறமுடியாது. நான் பா.ஜ.க-வுடன் இருப்பதே மக்களுக்கு செய்யும் சேவைதான்” என்றார்.
யார் இந்த ஸ்ரீலேகா?
1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, தனது பணி காலத்தின் கடைசி நாட்களில் கேரளாவின் சி.பி.ஐ(எம்) அரசாங்கத்துடனான உறவை முறித்துக் கொண்டார். அவர் ஓய்வு பெறும் நாளில், டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முறையான பிரியாவிடை விழா மற்றும் மரியாதை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு கல்லூரி விரிவுரையாளராகவும், வங்கி அதிகாரியாகவும் இருந்துள்ளார். அவர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-யாகவும், பின்னர் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி-யாகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்தபோது, சி.பி.ஐ-யில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். மேலும், அவர் ஒன்பது புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, டி.ஜி.பி அந்தஸ்து பெற்ற முதல் பெண் அதிகாரி என்கிற பெருமையும் பெற்றார். அவர் கடந்த 2020-ல் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் பொது இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
Leave your comments here...