தேர்தல் மூலம் புதிய அரசு – ஜம்மு – காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!
ஜம்மு-காஷ்மீரில் பேரவை தேர்தல் மூலம் புதிய அரசு அமைய உள்ளதால், அங்கு அமலில் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் இக்கூட்டணி முறிந்தது. அதன்பின் மெஹபூபா முப்தி தலைமையிலான மாநில அரசு கவிழ்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான ஒன்றிய அரசின் உத்தரவை உறுதிசெய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தவும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கவும் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு – காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய ேததிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, வரும் 16ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. இதற்கான அரசிதழ் அறிவிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 73வது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யூனியன் பிரதேசத்தில் அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54வது பிரிவின்கீழ் முதல்வர் நியமிக்கப்படுவதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டதால், புதிய முதல்வர் பதவியேற்ற பின்னர் மற்ற மாநிலங்களை போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...