சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் ரோல்.. 5 பேருக்கு உடல் நலம் பாதிப்பு – உணவகத்திற்கு சீல்..!
புதுக்கோட்டையில் சவர்மா கடையில் வாங்கிய சிக்கன் ரோலை சாப்பிட்ட 7 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சவர்மா கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்து சுமார் 7 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்த சவர்மா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அளித்த பேட்டியில்: சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளோம். அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் அதற்கென்று உரிய முறையில் உணவு தயாரிக்க தெரிந்தவர்தான் அதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தெரிந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் அந்த கடையை நடத்த வேண்டும்.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ரோல் சாப்பிட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் அவர்கள் சாப்பிட்ட உணவால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வுக்கு பின்னர்தான் அது தெரியவரும்” என்று தெரிவித்தார்.
Leave your comments here...