பாபா சித்திக் கொலை.. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி விளக்கம் – இதுதான் காரணம்…!

இந்தியா

பாபா சித்திக் கொலை.. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி விளக்கம் – இதுதான் காரணம்…!

பாபா சித்திக் கொலை.. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி விளக்கம் – இதுதான் காரணம்…!

மும்பையில் நேற்று இரவு மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர்.

பாபா சித்திக் கொலை சம்பவம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய குற்றப்பிரிவு டி.சி.பி., தட்டா நலவாடே கூறியதாவது: நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பிஸ்டல்கள் மற்றும் 28 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பாபா சித்திக் இல்லை. இருப்பினும், அவருக்கு 3 பாதுகாவலர்களை மும்பை போலீசார் நியமித்திருந்தனர். சம்பவம் நடக்கும் போது ஒரு பாதுகாவலர் உடன் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

இதனிடையே, சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், பாகிஸ்தானைச் சேர்ந்த ரவுடி ஷகாஷத் பாட்டியிடம் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காலில் பேசி தனது கும்பலுக்கு அசைன்மென்ட்டை கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஷ்னோய், கடந்த 9 நாட்களாக யாருடனும் பேசாமல், அமைதியாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் இப்படி அமைதியாக இருக்கும் போதெல்லாம், அவனுடைய கும்பல் ஏதேனும் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இக்கொலைக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி சுப்பு லோன்கர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நாங்கள்தான் பாபா சித்திக்கை சுட்டுகொலை செய்தோம். நடிகர் சல்மான் கான் தான் சண்டையை தொடங்கினார். சல்மான் கானுக்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கு அடுத்த குறி வைக்கப்படும். நாங்கள் இந்த சண்டையை விரும்பவில்லை. எங்களது சகோதரனை கொன்றுவிட்டீர்கள்.இன்று பாபா சித்திக் பாராட்டப்படுகிறார். ஆனால் ஒரு நேரத்தில் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்தார். தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு, எங்கள் சகோதரன் அனுஜ் தாபன் கொலை போன்ற காரணத்தால்தான் பாபா சித்திக்கை கொலை செய்தோம். எங்களுக்கு யாருடனும் பகை கிடையாது. ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் இப்ராகிமிற்கு யார் உதவினாலும் அவர்களை விடமாட்டோம்.

எங்களது சகோதரர்கள் யாரையாவது கொலை செய்ய முயன்றால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் முதலில் தாக்கமாட்டோம். அதோடு வாழ்க்கையின் சாராம்சத்தை நான் புரிந்துகொள்கிறேன், செல்வத்தையும் உடலையும் மண்ணாகக் கருதுகிறேன், நட்பின் கடமையை மதித்து சரியானதை மட்டுமே செய்தோம்.” என்று அந்த பதிவில் இந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவை போலீஸார் இன்னும் உறுதிபடுத்தவில்லை. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாபா சித்திக்கை கொலை செய்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாவது நபரான குமார் என்பவன் தலைமறைவாக இருக்கிறான். கொலையாளிகள் அனைவரும் கூலிக்கு வேலை செய்து இருக்கின்றனர். இதில் அவர்களுக்கு யார் வேலை கொடுத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாபா சித்திக் உடல் அரசு மரியாதையுடன் மெரைன் லைன் பகுதியில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இக்கொலை குறித்து விசாரிக்க டெல்லி போலீஸார் சிறப்பு படையை மும்பைக்கு அனுப்பி இருக்கின்றனர். மும்பையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் ஆள் வைத்து இக்கொலையை செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...