இந்திய தேசத்தில் கொண்டாடப்படும் தொழிலதிபர் – ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு..!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி என பார்ப்போம்.
அக்.9 (புதன்கிழமை) மாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்திருந்தார். இந்தச் சூழலில்தான் புதன்கிழமை பின்னிரவு அவர் காலமடைந்தார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவர் உயிரிழக்க காரணம்.
ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு
ரத்தன் டாடா, டாடா குழுமத்தை 21 ஆண்டுகள் வழிநடத்தினார். மார்ச் 1991 முதல் டிசம்பர் 2012 வரை குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக இருந்தார்.
ரத்தன் நேவல் டாடா டிசம்பர் 28, 1937 அன்று மும்பையில் நேவல் டாடா மற்றும் சூனி டாடா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவர் 1948 ஆம் ஆண்டு அவரது பெற்றோர் மறைந்த பிறகு, டாடா அரண்மனையில் அவரது பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார். அவர் டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார்.
ரத்தன் டாடா மும்பை கேம்பியன் பள்ளி, கதீட்ரல் பள்ளி மற்றும் மும்பையில் உள்ள ஜான் கானான் பள்ளி மற்றும் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி ஆகியவற்றில் படித்தார். அவர் 1955நியூயார்க் நகரில் உள்ள ரிவர்டேல் கன்ட்ரி பள்ளியில் தனது டிப்ளோமா பெற்றார். பின்னர் அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்குச் படிக்க சென்றார். கார்னெல் பல்கலைக்கழக கட்டிடக்கலை கல்லூரியின் முன்னாள் மாணவரும்கூட. அங்கு ரத்தன் டாடா 1959 இல் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் படித்தார்.
நான்கு முறை திருமணம் நெருங்கி வந்தாலும், டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரியும் போது காதலில் விழுந்ததை ஒருமுறை ஒப்புக்கொண்டார். ஆனால் நடந்துகொண்டிருக்கும் 1962 இந்திய-சீனா போரின் காரணமாக, காதலியின் பெற்றோர் இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று டாடா கூறினார்.
1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய டாடா, டாடா ஸ்டீலின் செயல்பாடுகளை நிர்வகித்தார். அப்போது முதல் டாடா வணிகத்தை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து சென்றார். கள அனுபவத்தையும் பெற்றார்.
1991 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா, ஜேஆர்டி டாடாவால் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, குழுமத்தின் தலைவரானார். அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது கொள்ளு தாத்தாவால் நிறுவப்பட்ட குழுவை 2012 வரை நடத்தினார்.
அவர் இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலின் போது டாடா குழுமத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். மேலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலான டாடா நானோ மற்றும் டாடா இண்டிகா உள்ளிட்ட பிரபலமான கார்களின் வணிக விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
இவரது தலைமையில் டாடா குழுமம் சில குறிப்பிடத்தக்க பிராண்டுகளை கையகப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டில் டாடா நிறுவனம் டீடெட்லி நிறுவனத்தை $450 மில்லியனுக்கும், 2007 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல், ஸ்டீல்மேக்கர் கோரஸ் GBP 6.2 பில்லியனுக்கும் வாங்கியது. 2008 ஆம் ஆண்டு டாடாவின் மைல்கல் என கூறப்படும் வகையில் ஜாகுவார் லேண்ட்ரோவரை டாடா 2.3 பில்லியனுக்கு கையகப்படுத்தியது.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்திய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2004 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
2009 ஆம் ஆண்டில், டாடா தனது வாக்குறுதியை நிறைவேற்றி, உலகின் மிக மலிவான காரை – டாடா நானோ, ரூ. 1 லட்சம் விலையில் மார்க்கெட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.
2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவரது தலைமையில் குழுமத்தின் வருவாய் 1991 ஆம் ஆண்டு வெறும் ரூ. 10,000 கோடியில் இருந்து 2011-12ல் மொத்தம் $100.09 பில்லியன் (சுமார் ரூ. 475,721 கோடி) என பன்மடங்கு வளர்ந்தது.
அதன்பின்னர் டாடா குழுமத்தில் சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தலைமைப் பிரச்சனை உருவானது. அக்டோபர் 2016 முதல் தற்காலிகத் தலைவராக டாடா மீண்டும் பணியாற்றினார். 2017 ஜனவரியில் டாடா குழுமத்தின் தலைவராக என் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ரத்தன் டாடா ஒரு உரிமம் பெற்ற விமானி. 2007 ஆம் ஆண்டு F-16 ஃபால்கனை ஓட்டிய முதல் இந்தியர் என்று கூறப்படுகிறது. அவர் கார்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் விலங்குகள், குறிப்பாக நாய்கள் மீது அதிக அன்பு கொண்டிருந்தார்.
ரத்தன் டாடா தனது தனிப்பட்ட சேமிப்பை Snapdeal, Teabox மற்றும் CashKaro.com இல் முதலீடு செய்தார். அவர் Ola Cabs, Xiaomi, Nestaway மற்றும் Dogspot ஆகியவற்றிலும் முதலீடு செய்தார்.
அல்சைமர் நோய்க்கான காரணத்தை அடிப்படையாக கொண்ட வழிமுறைகளை ஆய்வு செய்வதற்கும் அதன் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கும் டாடா டிரஸ்ட்ஸ், இந்திய அறிவியல் கழகமான நியூரோ சயின்ஸ் மையத்திற்கு ரூ.750 மில்லியன் மானியத்தை வழங்கியது.
ரத்தன் டாடா தலைமையில் பொதுசேவைகளுக்கு ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை கொடுப்பதிலும் அதிக முன்னுரிமை கொடுத்தது.இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷன் உட்பட பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை ரத்தன் டாடா வென்றுள்ளார்.
குறைந்த விலையில் சிறிய கார் :- நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர்.
இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்: கடந்த 2021-ல் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்தபோது, அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். ‘விருதுகளை காட்டிலும் இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்’ என அப்போது அவர் சொல்லி இருந்தார்.
இப்படியாக அவரது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு உள்ளங்களையும் ஈர்த்தது. அதன் காரணமாகவே 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் கொண்டாடப்படும் தொழிலதிபர்களில் முதன்மையானவராக உள்ளார். பூவுலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது பேரை சொல்லும் வகையில் டாடா குழுமம் அவர் விட்டு சென்ற பணிகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave your comments here...